தேவதேவன் இணைய சந்திப்பு - எனது உரை

                                        

அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 'கா.நா.சு. உரையாடல் அரங்கு' முன்னெடுப்பின் சார்பாக கவிஞர் தேவதேவனுடன் ஒரு இணைய சந்திப்பை நிகழ்த்தினார்கள். தேவதேவன் கவிதைகள் குறித்த ஒரு சிறு உரையை ஆற்றியிருந்தேன், அதன் காணொளிக்கான இணைப்பை இந்தக் குறிப்புடன் அளித்திருக்கிறேன்.

உரையாடலுக்கான முன்னேற்பாடாக ஒரு சிறு குறிப்பை எழுதி வைத்துக்கொண்டு அதைப் பலமுறை பேசி ஒத்திகையும் பார்த்திருந்தேன். ஒத்திகையில் ஏழு நிமிடங்களில் தொடங்கி பத்து நிடங்கள் வரை இந்த உரை அமைந்திருந்தது. பலமுறை பேசவேண்டியவற்றை மறக்கவும் செய்திருந்தேன், இன்னும் நன்றாக பயிற்சி செய்திருக்கலாமோ என்ற தவிப்பு தொடர்ச்சியாக இருந்தது.

நான் பலர் முன் உரையாடுவதில் பழக்கமில்லாதவன், தவிர இயல்பான கூச்ச சுபாவியான எனக்கு இதில் சில சவால்கள் இருந்தன. முதலில் உரையை பேச்சு வழக்கில் அமைத்துக்கொள்ளலாமா அல்லது ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் நிகழ்த்துவதா என்ற குழப்பம் இருந்தது. தூய தமிழில் உரையாற்றுவதே இயல்பாக எனக்கு அமைந்தது, அது எனக்கே ஆச்சரியம் அளித்த ஒன்று.

ஒத்திகையில் பேசவிருப்பதை நினைவில் நிறுத்திக்கொள்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன. அது நினவாற்றல் தொடர்பான ஒன்று என்றாலும், நூறு பேர் இருக்கும் அவையில் பேசுவதில் இருந்த பதற்றமும் பேச எண்ணியவற்றில் சில பகுதிகளை மறந்துவிடக் காரணமாக இருந்தது.

பேசி முடித்தவுடன் எனக்கு ஆயாசமாக இருந்தது, நன்றாக உரை அமையாததன் அதிருப்தி நிறைந்திருந்தது. தூய தமிழில் பேசுவதில் இருந்த நாடகத்தன்மை, உரை ஏழு நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டதன் ஏமாற்றம் இரண்டும் கலந்த உணர்வு.

காணொளியை ஒருமுறை மட்டுமே பார்த்தேன், அதற்குமேல் பார்க்க விரும்பவில்லை. இத்தனை முறை கண்ணைச் சிமிட்டுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை, அது மிகையாக உறுத்துகிறது. தவிர என்னுடைய குரலின் பதிவுகளை நானே கேட்கையில் எப்போதுமே ஒரு திகைப்பு ஏற்படுகிறது, அது நானல்ல வேறு யாரோ என்பது போல.

நமக்கு இயல்பாக வராத செயல்களைச் செய்வதில் உள்ள சவால்களை கடந்ததில் மட்டுமே முழு திருப்தி எனக்கு. அதற்கு அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் மனதில் நன்றி சொல்லிக்கொள்வேன்.

எழுத்தாளர் சுஜாதா 'பதினைந்து நிமிடப் புகழ்' என்று ஒரு கருத்தை 'கற்றதும் பெற்றதும்' தொகுப்பில் எழுதியிருந்தார். பதினைந்து நிமிடங்கள் இல்லையென்றாலும், நான் எனக்கான ஏழு நிமிடப் புகழை அடைந்துவிட்டேன்!

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை