விசும்பு தொகுப்பு - வாசிப்பனுபவம்

                                                 

விசும்பு தொகுப்பின் கதைகளுக்கான தனிக் குறிப்புகள்

கீழ்க்கண்ட கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ளது. கட்டுரை எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 1, 2022. வெளியான நாள்: டிசம்பர் 28, 2022.

விசும்புஒரு வாசிப்பு

தமிழில் அறிவியல் புனைக்கதைகளை சுஜாதா எனும் ராட்சஸ உருவத்தின் நிழல் படியாமல் எண்ணிப்பார்க்க இயலாது. இந்தக் குறிப்பை எழுதுவதற்காக சுஜாதாவின் சில அறிவியல் புனைக்கதைகளை இணையத்தில் மீள் வாசிப்பு செய்தேன் (www.sirukathaigal.com). முதல் சில கதைகளில் ஆச்சரியமும் பகடியுமாக நம்மை ஆக்ரமித்து மூன்று நான்கு ஐந்து ஆறாம் கதைகளில் ஒரு எழுத்தாளன் வாசகனுடன் நிகழ்த்தும் சுவாரசிய விளையாட்டாக மட்டுமே எஞ்சி சலிப்புணர்வை அளிக்கின்றன. அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் இந்திய மண்ணில் அமர்ந்திருப்பவை, அறிவியலின் மிகைச் சாத்தியங்களைக் கையாளுபவையாகவோ, அல்லது அறிவியல் உருவாக்கும் சூழலால் தீண்டப்பட்டவையாகவோ உள்ளனர். அவர்களின் எதிர்வினைகளுக்கான பிண்ணனி மறுபுறம் சுரண்டப்பட்ட ஒரு அழகிய ஒற்றைப்பரிமாண பொம்மையாகவே காட்சியளிக்கிறது.

சுஜாதாவின் பெரும்பான்மையான அறிவியல் புனைக்கதைகளில் இலக்கிய வாசிப்பு எனும் தளத்துக்குள் நுழைந்துவிட்ட வாசகனுக்கு, கவர்ந்திழுக்கும் நடை எனும் (தனித்துவமான) அம்சத்தைத் தாண்டி பெற்றுக்கொள்ள அதிகமில்லை.

மாறாக, விசும்பு தொகுப்பின் கதைகள் தத்துவம், மதம், அற உணர்வு, பிரபஞ்சத்தில் மனிதனின் இருப்பு, பண்பாடு, அறிவியலை ஒற்றைப்படையாக அணுகும் மனிதனின் இயல்பு, தேடலின் பித்து, பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் அடிப்படைகள் என பல தளங்களில் நிகழ்ந்து நம்மிடம் ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றன. அறிவியல் புனைகதைகள் எனும் வரையறைகளுக்கு அப்பால், இலக்கியத் தரமான சிறுகதைகள் நம்மில் தொட்டுச்செல்லும் அனைத்து அடிப்படைகளும் உள்ளடங்கியதாக விசும்பு தொகுப்பின் பல சிறுகதைகள் இருப்பதையும் உணரலாம்.

அறிவியல் புனைக்கதைகளைத் தொகுப்பாக வாசிக்கையில் அதற்கே உரிய மனநிலைகள் குவிந்துகொள்கின்றன. பிரபஞ்சம், பால் வீதி, வால் நட்சத்திரம், கோள்கள், பறக்கும் தட்டு, மனித மூளையின் சாத்தியங்கள், அதிசய மூலிகைகள், வலசைப் பறவைகள், மனிதனின் விசித்திர உணவுப் பழக்கங்கள் என கதைகளுக்கு வெளியே இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். தொகுப்பின் கதைகளில் அதற்கான முடுக்கிகள் இருந்தன. களிப்பு, தனிமை, ஆச்சரியம், மனித அறிவின் எல்லைகளை மீறியவற்றைத் தெரிந்துகொள்வதில் ஏற்படும் திகைப்பு, தத்துவார்த்தமான கேள்விகள் ஏற்படுத்தும் தவிப்பு என பல்வேறு உணர்வுநிலைகளின் ஊடாட்டம்.

தொகுப்பின் கதைகளில் நம் பண்பாட்டின் ஆழத்தில் நின்றுகொண்டிருக்கும், அறிவியலை அதன் நீட்சியாகவே அணுகும் கதைமாந்தரும், நவீனத்துவத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு மூர்க்கமாக உரையாடும் தரப்பும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார்கள் - கதைகளை நிகழ்த்திக்காட்டுபவர்களும் அவர்களே. பல சிறுகதைகள் பகடியும் துள்ளலுமான நடையுடன் அமைந்துள்ளன - அறிவியல் புனைகதைகளின் இறுக்கத்தை உடைத்து 'பிரதியின் இனபம்' என்பது சாத்தியமாக இது உதவுகிறது.

உதாரணம் 'பூர்ணம்' சிறுகதை:

டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள்?‘

மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள்‘ என்றார் டாக்டர். ‘நான் மூளை ஆராய்ச்சியாளன்'.

மனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகன் வாசகர்களுக்கு இலக்கியத் தளத்தின் பல்வேறு வெளிப்பாடுகளை ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்வதற்கான பார்வைகளையும் அடிப்படைகளையும் அமைத்துக்கொடுக்கிறார். அறிவியல் புனைகதைகள் எனும், தமிழில் இன்னும் அரிய இலக்கிய வகைமையாகவே இருக்கும் இவ்வகைக் கதைகளிலும் அவருடைய ஆழ்ந்த தாக்கத்தை உணர்கிறேன். ஒரு வாசகனுக்குள் விசும்பு தொகுப்புக்குப் பின் அறிவியல் புனைக்கதைகளை அணுகுவதில் ஒரு மாற்றம் நிகழும் என்றே எண்ணுகிறேன். அதீதக் கற்பனைகளாகவும் முரடு தட்டிய தகவல் குவிப்புகளாகவும் உள்ள அறிவியல் புனைக்கதைகளில் 'இங்கு மனித உணர்வுகளுக்கான இடம் எங்கே?' என்று கேட்க நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என உணர்த்துகிறார்.

ஐந்தாவது மருந்து

உயிர் வாழ்தல் என்பது மனிதனின் ஆதார விழைவு. இயற்கை நோய்களின் வடிவத்தில் மனிதனுக்கு அளிக்கும் தடைகளை, சமப்படுத்தும் போக்கை வெல்ல மனிதனின் முன்னெடுப்புகளில் மருந்துகளின் பங்கு அளப்பரியது. நோய்களுக்கு ஒரு அதிசய மருந்து எனும் கருத்து மனிதனின் நீடித்த கனவுகளில் ஒன்று. 'ஐந்தாவது மருந்து' சிறுகதை இந்தக் கருதுகோளை இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் பிண்ணனியில் பேச முனைகிறது. இப்படி ஒரு அதிசய மருந்தை உருவாக்கும் தளவாய் ராஜா எனும் மருத்துவர் கதையின் முடிவில் எடுக்கும் முடிவுக்குப் பின் வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமில்லை, அதில் இயற்கையின் இயங்குவிதிகளைப் புரிந்துகொண்ட, அதன் முன் பணியும் ஒரு சித்தனின் மனமும் உள்ளது.

நோய் என்பது நம் உடல் செயல்படும் முறையில், நாம் வாழும் வாழ்வின் ஒரு பகுதியா? நவீன மருந்துகள் முற்றிலுமாக நோயைக் குணமாக்குகிறதா? எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகள் சாத்தியமா? நோயை விளைவிக்கும் கிருமியை முற்றிலுமாக அழிப்பது இவ்வுலகின் இயங்கு விதிகளுக்கு எதிரானதாகாதா, சமநிலைகுலைவாகாதா? ஓரு நோயை மருந்துகள் இல்லாமல் இயல்பாக ஏற்றுக்கோண்டு வாழ்வது சாத்தியமா? இப்படிப் பல கேள்விகளை இந்தக் கதை நம்மிடம் கேட்கிறது. நோய் குறித்த நம் அணுகுமுறைகளும், அடிப்படைச் சிந்தனைகளும் நவீன மருத்துவ முறைகளை நோக்கியே பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

மனிதனின் நுகர்வு என்பதை இன்னும் ஆழமாக விரித்துக்கொள்ளலாம். இன்று நாம் புழங்கும் உணவுப் பொருட்களில் 'பொறுப்பான முறையில் வளர்க்கப்பட்ட', 'இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட' என்பது போன்ற பதங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பொறுப்புணர்வு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் இருக்கவேண்டிய அவசியத்தை கதை உணர்த்துகிறது. ஆனால் அதற்கான தத்துவக் கண்ணோட்டமோ, மாற்றுச் சிந்தனைகளோ நம்மிடம் உள்ளதா என்பதே இங்கு கேள்வி.

கோவிட் நோய்த்தொற்று குறித்தும், அதன் தடுப்பூசிகளின் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்தும் எழுந்த விவாதங்களின் எல்லா அடிப்படைகளும் இந்தச் சிறுகதையில் பேசப்பட்டுள்ளது, ஆனால் கதை எழுதப்பட்ட ஆண்டு 2000. 2000த்தில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை இருபது ஆண்டுகள் கடந்து தற்கால நோய்ச் சூழலின் எல்லாத் தளங்களையும் தொட்டுச் செல்வதை பிரமிக்காமல் கடக்கமுடியவில்லை.

இங்கே, இங்கேயே

அறிவியல் புனைக்கதைகளில் வேற்றுலக வாசிகள் பூமிக்கு வருகைபுரிதல் எனும் தளம் நிறைய எழுதப்பட்ட ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் 'நாம் மட்டுமே தனியர்கள்' எனும் எண்ணத்தின் திகைப்பும், இதன் மறு எல்லையான பிற கிரகத்து மனிதர்களின் இருப்பும் நம் சிந்தனைகளை என்றுமே ஆக்ரமிக்கும் ஒன்று.

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரம்மாண்டம் இந்தப் பிரபஞ்சமும் வான் வெளியும். புலப்படாத ஒன்றைக் குறித்து கற்பனைகளை வளர்த்துக்கொளவது, இந்தக் கற்பனைகளை தர்க்கங்களுக்கு உட்படுத்தி அதன் சாத்தியங்களை அராய்ந்து அந்தப் பிரம்மாண்டத்தின் சில புள்ளிகளைத் தெரிந்துகொள்ளவது என்பதே இதுவரையிலான மனிதனின் நகர்வு. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மனிதர்கள் இயல்பாகவே தர்க்கத்தை விலக்கி உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்கள். ஒரு விஞ்ஞானியும், நாகரிக மனிதனும் அறிந்துகொள்ள முடியாத, அவர்களை அலைக்கழிக்கும் ஒன்றை பழங்குடி மனிதன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

விசும்பு –

'வலசை போதல்' எனும் பதத்தை நாம் எல்லோரும் ஒருமுறையாவது கேட்டிருப்போம். விலங்குகளும், குறிப்பாக பறவைகளும் பருவகால மாற்றங்களை உணர்ந்துகொண்டு இடம்பெயர்வதைக் குறிக்கும் அழகிய மொழி வெளிப்பாடு. பறவைகள் ஆயிரமாயிரம் மைல்கள் பயணித்து செல்ல வேண்டிய இடத்தைத் துல்லியமாக அடைகின்றன. இப்படி இடம்பெயர்வதற்கான உந்துதல் பறவைகளுக்கு எப்படி ஏற்படுகிறது? வான் எனும் பிரம்மாண்டமான கூரையின் கீழ் பறக்க அவைகளுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது, இலக்குக்கான பாதைகளை, திசைகளை அவை எப்படித் தீர்மானிக்கின்றன என்று எண்ணும்போதே இயற்கை எனும் பேராற்றலின் வலிமை நம்மைத் திகைக்கவைக்கிறது.

மருத்துவருமான தந்தை பறவைகளின் வலசை போதல் என்பதை இயற்கையின் அறிய முடியாத விந்தையாகக் காண்கிறார். மகன், அறிவியல் பார்வையுடன் இதை நோக்குகிறார். தந்தையின் பார்வையில் இது இயற்கையிலேயே பறவைகளுக்கு அமையப்பெற்ற உள்ளுணர்வு, மரபணுவில் கடத்தப்பட்டுவிட்ட ஒரு செய்தி. மகனுக்கு இதன் அடிப்படைகள் நவீன அறிவியல் நோக்கில் அறியப்பட வேண்டிய ஒரு சாத்தியப்பாடு. இருவருக்குமிடையில் மாட்டிக்கொள்ளும் ஒரு மேளாரின் பார்வையில், பகடியான ஒரு நடையுடன் சுவாரசியம் குறையாமல் சொல்லப்பட்ட ஒரு கதை இது.

கதையின் முடிவில் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் முழுமையை, ஒத்திசைவைப் பறைசாற்றும் ஒரு முடிவு வருகிறது, சில வியப்பான சம்பவங்கள் நிகழ்கின்றன. 'பிரபஞ்சம் என்பது முழுமை, அதன் துளிகளைத்தான் அறிவியல் எனும் பெயரில் ஆராய்கிறோம்' எனும் தந்தை கருணாகர ராவின் சொற்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன, ஒட்டுமொத்த கீழைத் தத்துவத்தின் குரலாக ஒலிக்கின்றன.

பூர்ணம் –

மனித மூளை, அதன் அமைப்பு, செயலபாடுகள் போன்றவை இன்னும் இயற்கை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு ரகசியப் பேழை - அதைத் திறந்து உள்ளிருக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ள பல நூறாண்டுகளாக மனிதன் முயன்றுகொண்டுதானிருக்கிறான். மூளைதான் நம்மைச் செயல்படுத்துகிறது, நாம் அதன் கட்டளைகளுக்கு அடிபணியும் உடல் மட்டுமே. மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் மூளையின் அமைப்பில் தனித்தன்மை உண்டு. பிறப்பில் அடைந்துகொண்டவற்றை சூழல், அனுபவங்கள் என நாம் ஒவ்வொருவரும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறோம். மூளை நரம்பியல் சார்ந்த வார்த்தைகளில் சொன்னால், மூளையின் நியூரான் இணைப்புகளை விரித்துக்கொண்டே செல்கிறோம்.

மூளையின் முழு ஆற்றலில் ஒரு சிறு பகுதியைத்தான் இத்தனை ஆயிரமாண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் மனிதனால் பயன்படுத்த சாத்தியமாகியுள்ளது. மனித மூளையின் நியூரான் இணைப்புகள் உடல் அளிக்கும் மின்னூட்டம் மற்றும் இன்னும் சில காரணிகளால் உயிர்ப்புற்று தகவல்களைச் சேகரிக்க, கடத்த, தொகுத்துக்கொள்ள ஒளிர்கிறது. பொதுவாகச் சொன்னால் எத்தனை நரம்பு இணைப்புகள் மூளையில் இருக்கின்றனவோ அத்தனை ஆற்றல் கிடைக்கப்பெறுகிறோம்.

மனித மூளையின் முன் பகுதியான Pre Fontal Cortex சிந்தனை, தகவல் தொகுப்பு, திட்டமிடல் போன்றவற்றுக்கு அடிப்படையானது. இந்த ஒரு பகுதியை மட்டும் அதீதமாக முடுக்கிவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது கதையின் மையம், இதை குறுகிய பார்வைகொண்ட ஒரு விஞ்ஞானி செய்து பார்க்கிறார். இயற்கை எல்லாவற்றையும் சமன்செய்யும் ஆற்றல் படைத்தது. நாம் இயல்பாகவே மூளையின் எல்லாப் பகுதிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறோம், அது இயற்கையின் ஆணை. இதை மீற முயலலாம், ஆனால் வேறு ஏதோ ஒரு வகையில் இந்த மீறலின் விளைவுகள் சமன்செய்யப்படும். கதையின் முடிவில் இந்த உணமையின் ஒரு பகுதி ஒளிந்துகொண்டுள்ளது.

பித்தம் –

உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஒருவகை பித்து நிலையில், விளிம்பில் இயங்கும் மனிதர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களே கனவு காண்கிறார்கள், கனவை நோக்கிப் பயணிக்கும் துணிவைப் பெறுகிறார்கள், அந்தக் கனவுக்காக பலியாகியுமிருக்கிறார்கள். இந்தக் கதை அது போன்ற ஒரு பித்து நிலையில் உள்ள மனிதனையும் அவனுடைய தேடலையும் பேசுகிறது. பித்தன் கோவில் பண்டாரம், பித்து இரசவாதத்தால் தங்கத்தை உருவாக்குவது.

கதையில் கோலப்பன் எனும் பகுத்தறிவுவாதிக்கும், பண்டாரத்துக்குமான உரையாடலில் அறிவியல் புனைக்கதைக்கான கட்டுமானங்கள் விரிகின்றன. இந்தக் கதையில் தங்கம் என்பது பலி கேட்கும் ஒரு யட்சியின் குறியீடுதான். அது இடைவிடாது பண்டாரம் போன்ற ஆத்மாக்களின் மனதில் ஏறி அமர்ந்துகொண்டு தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது.

இந்தக் கதையின் பண்டாரம் எனக்கு 'மலைகளின் உரையாடல்' கதையின் சுதாகரையும், 'குருவி' கதையின் மாடன்பிள்ளையையும், 'மாயப்பொன்' கதையின் நேசப்பனையும் நினைவுபடுத்தியது. நம்பும் ஒன்றை எப்படியும் செய்து முடித்துவிடவேண்டிய தீரா விழைவும், அந்தச் செயலில் ஞானமும் பெற்ற அழகான கதாப்பாத்திரங்கள்.

 உற்றுநோக்கும் பறவை –

தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒரு நாவலாக விரிந்துகொள்ளுமளவுக்கு பல தளங்களைத் தொட்டுச்செல்கிறது. ஒரே மனிதனுக்குள் இருக்கும் இரண்டு குணங்களை 'Schizophrenia' மனநிலை, உளப்பிளவு (Split Personality) என்று கூறுகிறோம். இந்த அம்சம் கதையில் சொல்லப்பட்டு அறிவியல் புனைக்கதையாக மாறுகிறது. மதம், யோகம் மரபு, மூளையில் Dopamine சுரப்பி, உளவியல் மருத்துவம் என்று ஒரே கதையில் பல அடுக்குகளும், தகவல்களும் வருகின்றன.

நம் எல்லோருக்குள்ளும் இரண்டு மனிதன் ஒளிந்துகொண்டிருக்கிறானா? கடவுளை நம்பாதவன் மதத்தைக் கைவிடவேண்டும், அது முற்றிலும் சாத்தியமா? மதம் உருவாக்கிய குறியீடுகளை ஒருவனின் நனவிலி மனதிலிருந்து அழிக்கமுடியுமா? அப்படி அழித்துவிட்டு புதிதாகத் தொடங்கினால் என்னென்ன விளைவுகள் நிகழும் என கதை முழுக்க செறிவான கேள்விகளை கற்பனையைத் தூண்டும் வகையில் ஆசிரியர் நம்முன் வைக்கிறார்.

'உற்றுநோக்கும் பறவை' எனும் தலைப்பை பலமுறை மனதுக்குள் சொல்லிப் பார்த்தால் ஏற்படும் திகைப்பும் சலனங்களும் சிறிதல்ல.

நம்பிக்கையாளன் –

அணு ஆயுதப்போரினால் ஏற்படும் ஒரு பேரழிவுக்குப் பின்னான சூழலில் (Post Apocalyptic) ஒரு குகையில் வாழும் இறைநம்பிக்கையளர்களைப் பற்றிய சிறுகதை, அதில் ஒரு இளைஞனும் இருக்கிறான். போர் இறைநம்பிக்கையாளர்களுக்கும் மறுப்பாளர்களுக்குமானது. கதையின் இறுதியில் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பவும் சேதங்களில்லாமல் இருப்பதும், கீழை நாடுகள் பேரழிவுக்குள்ளாகியிருப்பதும் சொல்லப்படுகிறது. கதையில் அந்த இளைஞன் எடுக்கும் முடிவுக்கான காரணங்களை வாசகனின் ஊகத்துக்கே கையளித்துவிடுகிறார் ஆசிரியர்.

இக்காட்டான சூழலிலும் அந்த இளைஞன் மனதில் அவனுடைய பாலைவன கிராமத்தையும், ஒளிமிக்க வானையும், பசுமைமிகுந்த பூமியையும் கற்பனை செய்துகொள்கிறான், கதையின் எழுச்சி மிகுந்த பகுதி இது. மத நம்பிக்கையும் மறுப்பும் அதன் அதீத இறுக்கத்தில் அடிப்படைவாதம் எனும் நிலையை அடைகிறது. அடிப்படைவாதம் என்பதை உணர்த்தும் ஒரு குறியீட்டம்சம் கொண்ட சிறுகதை என்றும் இதை வாசிக்கலாம்.

நாக்கு –

உணவுப் பழக்கங்கள் நம்மிடம் எப்படி கடத்தப்படுகின்றன? உணவுக்கான தேர்வு என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக நம்மிடம் வந்து சேர்கிறது. நாக்கு உணவுத் தேர்வுக்கான செய்திகளை மூளைக்கு அளிக்கிறது. நூற்றாண்டுகளாக மரபணுவில் இந்தத் தேர்வு நம்மிடம் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் தந்தையோ அன்னையோ விரும்பி உண்ணும் உணவுகளைத் தாமும் விரும்புவதைப் பார்க்கிறோம்.

நாகரிகத்தின் சுவடுகள் எட்டாத அமேசான் காடுகளில் சில பழங்குடிகளிடம் 'Cannibalism' இன்னும் ஒரு வழக்கமாக எஞ்சியிருக்கிறது. மிருகங்களில் தன் குட்டிகளை உண்ணும் இனம் பற்றிய குறிப்புகளை வாசிக்கிறோம். வெண்முரசின் 'மழைப்பாடல்' நாவலில் சாதகப்பறவையில் தாய் ஒன்று தன் குஞ்சுகளுக்கு தன்னையே உணவாக அளிக்கும் அத்தியாயம் வருகிறது (அத்தியாயம் 88: புதிய காடு). பிணம் உண்ணும் அகோரிகள் இந்து மதத்தில் இன்னும் நீடிக்கிறார்கள். நாகரிக மனிதன் நரமாமிசம் உண்டிருப்பானா? இந்தப் பழக்கம் மருவி வேறொரு வடிவத்தில் தற்காலத்திலும் நீடிக்கிறதா எனும் கேள்விகளை சிறுகதை நம்முன் வைக்கிறது. நாக்கு எனும் உடலுறுப்பு நம்மால் குறைத்துமதிப்பிடப்படுகிறதோ எனும் வியப்பு ஏற்படுகிறது.

சிறுகதையை வாசித்ததும் விசித்திரமான உணவுப் பழக்கங்கள் குறித்த சிந்தனைகள் மனதில் தோன்றுகின்றன. பெரு நாட்டின் மதுவான 'மஸாட்டோ', வேர்க்கிழங்கை உண்டு ஊறிய எச்சிலைப் பயன்படுத்தி புளிக்கச்செய்து உருவாக்கப்படுவது என்ற செய்தி நினைவுக்கு வருகிறது. இந்திய உணவுமுறைகளில் எதேனும் விசித்திரமான பழக்கங்கள் உள்ளனவா?

நாம் எல்லோரும் தாய்ப்பால் அருந்தித்தானே வாழ்வையே துவங்குகிறோம்!

தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை ஒரு ஆய்வு –

செவ்வாய் கிரகத்தில் நிகழும் கருத்தரங்கு ஒன்றில் ஜெயமோகன் எனும் பெயரை 'உத்தேசித்துக்கொள்ளும்' எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தின் எதிர்கால வடிவம் குறித்து உரையாற்றுகிறான். கருத்தரங்குக்கான காலம் நேரடியாக வரையறுக்கப்படவில்லை. பூமி முற்றிலும் அழிவுக்குள்ளானதால் பூமி வருடம், வெளி வருடம் எனும் பதங்களால் காலம் சுட்டப்படுகிறது. பூமி வருடம் 2868க்குப் பிறகான ஒரு வருடத்தில் நிகழும் கருத்தரங்கம் என்று புரிந்துகொள்ளலாம். கருத்தரங்கம் தமிழ் இலக்கியத்தின் 'வடிவம்' எனும் அம்சத்தை மையப்படுத்துகிறது.

அச்சுஊடகம் வழக்கொழிந்து 'மின்நவீனத்துவம்' எனும் கருத்து உருவாகிறது. 2055ம் ஆண்டுவாக்கில் அச்சு ஊடக நூல்கள் கலைப்பொருள் சேகரிப்புகளுக்காக மட்டுமே சில நூல்களை அச்சிடுகின்றன. மின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்கிறது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் பல திசைகளில் திறந்துகொள்ளும் 'அதிநாவல்' என்ற வடிவம் பிறக்கிறது. ஒரு பிரதியின் வடிவத்தை அதன் சுட்டிகள் மூலம் வாசகனே தீர்மானிக்கும் தன்மை வளர்கிறது. மின் ஊடங்களின் பெருக்கத்தால், தகவல் சாத்தியங்களால் எழுத்தாளன் வாசகன் எனும் நிலை இலக்கியத்திலிருந்து விலகுகிறது. பூமி அழிந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தமிழினம் இலக்கியங்களை அதன் ஆதி வடிவில் புத்தகங்களாகவும், எழுத்தாளுமைகளை வழுபடும் வழக்கங்களாகவும் நீட்டித்துக்கொள்ளும் சூழல் அமைகிறது.

இந்தப் பகுதி கதை எனும் வரையறைக்குள் அடங்க மறுக்கிறது, அதீத கற்பனையால் இலக்கியத்தின் எதிர்காலத்தை ஊகம் செய்கிறது. முதலில் இதன் கருத்துக்களை ஒரு சுவாரசியத்துக்காக வாசித்து, பின் அதில் பேசப்படுபவற்றில் உள்ள உண்மைகளை மெல்ல நம் பிரக்ஞை உணர்ந்து திகைக்கிறது. தமிழ் விக்கி' எனும் கலைக்களஞ்சியத்தின் கூறுகளை இந்தக் கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறேன். ஒரு பதிவு பலநூறு பக்கங்களாக விரிந்து முழுமையடையும் மாயம் தொழில்நுட்பத்தின் இயல்புகளால் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் விக்கி குறித்த எண்ணங்கள் பல ஆண்டுகளாக ஆசிரியரின் மனதில் ஊறிக்கொண்டிருந்ததையும் இந்தக் கதை உணர்த்துகிறது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை