ஐஸ்கிரீம் - சிறுகதை
வெள்ளையம்மாவுக்கு மூன்று நாட்களாகவே அதிகாலையில் விழிப்பு தட்டிவிடுகிறது. அட்டாலியில் அடையும் சேவல் கூவவில்லை, மணி இன்னும் மூன்றாகியிருக்காது என்று கணித்தாள். தனக்கே உரிய சீரான முனகலுடன் சுழன்றுகொண்டிருந்த சீலிங் ஃபேன் சித்திரை மாத வெக்கையை பத்துக்கு பத்து ஓட்டுக் கூரை அறைக்குள் இறைத்துக்கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியில் இருந்த முருங்கைமரக் கிளைகளின் நிழல் உள்ளறைச் சுவற்றின் மீது மெல்ல அசைந்தது. வியர்த்திருந்த தன் கழுத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே ஏறி இறங்கும் தன் மார்பகங்களைப் பார்த்தாள். அவளுடைய உடல் ஐம்பத்தைந்து என்ற கணக்குடன் அழுத்தமாக முரண்பட்டது. 'இதென்ன சனியன் ஐஸ்கிரீம் திங்கனும்னு மனசு தெனவெடுக்குது. பேரம் பேத்தி எடுத்த வயசுல ஏன் இந்த விசித்திரமான ஆசை. அன்னாடம் ஜாமத்துல இதே நெனப்பா இருக்குது' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். வெள்ளையம்மா கடைசியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும், நினைவில் கூட கிட்டவில்லை. பேரனும் பேத்தியும் ஊர் திருவிழாக்களில் மகன் ராஜேந்திரன் வாங்கித் தரும் ஐஸ்கிரீமை முகமெல்லாம் பரப்பித் தின்பதை பார்ப்பதோடு சரி. 'கோலீப்பட எ...