Posts

Showing posts from September, 2025

முற்று - கவிதை

Image
                                                       செப்டம்பர் 12, 2025 நாங்கள் காத்திருந்தோம் ஒரு பெரிய கட்டிடத்தினுள், சிலர் சிலருக்காக சிலர் சிலதுக்காக சிலர் எதற்காகவோ எங்கள் எல்லோருக்கும் இருந்தன காரணங்கள், கட்டிடம் காத்திருந்தது அதனுள் கடிகாரம் காத்திருந்தது சாளரங்கள் காத்திருந்தன மேஜைகள் நாற்காலிகள் தேநீர் கோப்பைகள் மதுக் குவளைகள் எல்லாமும், எங்களுடைய காத்திருப்புத் தருணங்கள் கூடின, அவை ஊரின் காத்திருப்பாயின பிறகு  நகரத்தின் தேசத்தின் கண்டங்களின் பூமியின் காத்திருப்பாகியது, பிரபஞ்சமும் காத்திருந்தது, நான் என் காத்திருப்பு முடிவுற்று நீங்குகிறேன் கட்டிடத்தை விட்டு.     - பாலாஜி ராஜூ

பிரார்த்தனை - கவிதை

Image
                                                       செப்டம்பர் 7, 2025 பரபரப்பான சாலையில் உக்கிரமான சிவப்பு விளக்கு, வீடிலியின் பதாகையில் கலைந்த சொற்கள், அனிச்சையாய் கைகளில் தென்பட்ட இருபது பணம் சில ஒற்றைகளாய் இல்லாமலிருப்பதன் கனம், வாகனக் கண்ணாடி கீழிறங்கி வெளிவருகிறது புனிதக் கை பலநூறு கைகளின் பிரதிநிதியாய், பெற்றுக்கொண்டவன் உச்சரித்த அந்த வார்த்தை ஒலிக்கிறது சாலையெங்கும் ஒரு கூட்டுப் பிரார்த்தனையின் உச்ச வரியாய்.     - பாலாஜி ராஜூ

பத்திரம் - கவிதை

Image
                                                  ஜூன், 2025 மொழியைக் கற்றேன், நுணுங்கிய அர்த்தமற்ற வார்த்தைகள் என் முன் முடிவற்ற வரிகளாய், வாசிக்க முயல்கிறேன் புரியவில்லை, விரோதம் பாராட்டுகிறான் கையெழுத்திட மறுத்த என்னிடம் பத்திரக்காரன், மறுகேள்வியில்லாமல் கையெழுத்திடு என்றான் மகிழ்வாய் உலவிய ஹிப்பி, கவிஞன் சொன்னான் கைநாட்டுகிறேன்  என.     - பாலாஜி ராஜூ