கி. ராஜநாராயணன் இசையினூடாக - ஒரு குரல் முயற்சி
ஒவ்வொரு முறை என்னுடைய குரலைக் கேட்கும் போதும் சிறு திகைப்பு ஏற்படும். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு அந்நியனின் குரல் போல அது ஒலிக்கும், ஒருவகை முரட்டுக் குரல். செப்டம்பர் 5, மாலை ஆறுமணி அளவில் இசையமைப்பாளரும் அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் உறுபினருமான ராஜன் சோமசுந்தரம் 'நேரமிருக்கையில் அழைக்கவும்' என ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரிடம் சென்ற ஆண்டு பூன் காவிய முகாமில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராஜன் என்னுடைய குரல் மிக வலுவான ஒன்று என ஒரு உரையாடலில் சொல்லியிருந்தார் (Strong Base Voice). பத்து நிமிடங்களில் அவரை அழைத்தேன், "உங்கள் குரலுக்கு ஒரு வேலை வந்திருக்கிறது" என்றார். 'என்னுடைய குரலுக்கு ஒரு வேலையா!' என்று சற்று துணுக்குற்று அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்க, 'கோபல்ல கிராமம்' நாவலில் இருந்து ஒரு கும்மிப...