கரூர் பயணம் 2024
அமெரிக்காவில் இதுவரை பத்து குளிர்காலங்களை கழித்திருக்கிறேன். கோவிட் தொற்று வருடங்களான 2020 2021ம் ஆண்டுகள் தவிர ஒன்பது முறை கரூர் பயணம் செய்திருக்கிறேன். ஊர் குறித்த எண்ணங்கள் மெல்ல ஒரு ஏக்கமாக தொடங்கி இயல்பான பயணத் திட்டமாக உருமாறிவிடும். பொதுவாக பத்து வருடங்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை தருவதை பல வருட இடைவெளில் மட்டுமே நிகழ்த்துவார்கள், சிலர் அதை முழுமையாகவே தவிர்ப்பார்கள். அகம் புறம் என அதற்கான காரணங்களும் தர்க்கங்களும் நிறையவே உண்டு. இந்த முறை என்னைவிட மனைவி ஊருக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டினாள். நான் அடுத்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதை திட்டமிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய தம்பியின் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை, வளைகாப்பு சடங்கிற்கு செல்லவேண்டும் என்பதில் உறுத...