ஐன்ஸ்டீனின் கனவுகள், நாவல் - ஒரு பார்வை
காலத்திற்கும் நமக்குமான பிணைப்பு என்ன? காலத்தை நாம் என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்? ஒரு உருவகமாகவா? காலமும் இடமும் இணைந்த ஒன்று என விளக்கும் சார்பியல் கொள்கை வாயிலாகவா? காலம் நம்முடைய பிரக்ஞையில் ஆழமாகப் பிணைந்துவிட்ட ஒன்று. நம்முடைய ஆழமனதில் அருவமாக அமைந்துவிட்ட ஒன்று என்பதால் அதை தர்க்கப்படுத்திப் புரிந்துகொள்வது நம்முடைய அறிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. காலத்தை அறிவியலின் சமன்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். ஒரு ஆறிதல் எனும் வகையில் அறிவியல் வாயிலாக புரிந்துகொள்வது நமக்கு நிறைவளிக்கலாம். ஆனால் அதன் அருவத்தன்மையால் நமக்குள் உள்ள ஆழமான கேள்விகளுக்கு பதில் தேட தத்துவத்தையும் குறிப்பாக மீபொருண்மைத் தளத்தையுமே நாம் இயல்பாக நாடுகிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஒரு காப்புரிமை குமாஸ்தாவக வேலைசெய்கி...