ஏசுவின் காதலி - சிறுகதை
கொலம்பஸ் நகரில் மெக்ஸிகோ தேசத்தவர்களை எங்கும் காணலாம். பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் புல் வெட்டுபவர்களாக, அவர்களுக்கே உரிய சிறிய தெருக்களில் அமைந்த வீடுகளிலும் தெருக்களின் ஓரத்திலும் கால்பந்தாடுபவர்களாக, டெக்கரியா என்று அழைக்கப்படும் மெக்ஸிகோ தேசத்தின் பிரத்யேக உணவகங்களில் உண்பவர்களாக பரிமாறுபவர்களாக, தூசு பொதிந்த பழைய ட்ரக்குகளில் சாலைகளைக் கடப்பவர்களாக அவர்கள் தென்படுவார்கள். இந்தக் கதையின் மையமாக மெக்ஸிகோ தேசத்தின் அழகி ஒருவள் இருக்கிறாள். கோடைக்கால ஜூலை மாதத்தின் வெப்ப அலை பரவிய மாலையில் அவள் எங்கள் குடியிருப்பின் இரண்டடுக்கு வீடுகளில் பக்கவாட்டு கட்டிடத்தில் அண்டைவீட்டுக்காரியாக வந்து சேர்ந்தாள். டெக்ஸாஸ் என்ற பெயர் தாங்கிய மினி வேனில் தம் பெற்றோருடனும் ஒல்லியான தம்பியுடனும் வந்து இறங்கினாள். அவளுக்கு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கலாம்....