பூன் இலக்கிய முகாம் - எனது கடிதம்
ஆசிரியருக்கு, அமெரிக்காவில் இலையுதிர் காலம் மனதிற்கு இனியது. மரங்களின் வண்ணப் புன்னகைகளை எங்கும் காணலாம். மொத்த சூழலும் நிறங்களடர்ந்த ஒரு ஓவியத்தைப் போல காட்சியளிக்கும். வடக்குப் பகுதியில் தொடங்கும் இந்த நிற மாற்றம் தெற்கு நோக்கி சில வாரங்களில் நகரும். கொலம்பஸ் நகரிலிருந்து பூன் முகாம் நோக்கி ஏழு மணிநேரம் காரில் பயணம். சாலைகளெங்கும் புதிதாக சுதந்திரம் பெற்ற இலைகள் எனது வாகனத்தை வழிமறித்து துரத்திக்கொண்டிருந்தன. கிராமத்துக்குள் அரிதாய் நுழையும் வாகனத்தைச் சூழ்ந்து ஓடிவரும் சிறுவர்கள் என இலைகளை கற்பனை செய்துகொண்டேன். மாலை நான்கரை மணியளவில் முகாமிற்கான இடத்தை அடைந்தேன், சில நண்பர்கள் எனக்கு முன்னரே வந்திருந்தனர். இந்த முறையும் Cabin என்றழைக்கப்படும் மர வேலைப்பாடுகளால் ஆன மலை பங்களாவில் முகாமை ஒருங்கிணைத்திருந்தனர். தங்குவதற்காக அருகருகில் வசதியான நான்கு மலை வீடுகள். இலக்கிய அமர்வுகளுக்காக ...